மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் எழுபது கொரோனா நோயாளிகளை காணவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த நோய்த் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுக்க கொரோனாவிற்கு 4,40,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9,192,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலக அளவில் இந்த நோய்த் தொற்றுக்கு 4,74,445 இறந்துள்ளனர்.
நாட்டிலேயே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. மும்பையில் மட்டும் 67,000 க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். இதுவரை இந்த நகரகத்தில் மட்டும் 3,311 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இந்நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரேட்டர் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) பதிவு பட்டியலின்படி மொத்தம் எழுபது கொரோனா நோயாளிகளை காணவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இது தொடர்பாக உதவி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் காவல்துறையின் உதவியை கோரியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட முகவரி மற்றும் தொலைபேசியை வைத்து இவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்ட போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காணாமல் போன நோயாளிகள் அனைவரும் வடக்கு மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இது கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இது குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக், "ஆமாம். எங்களால் சில கொரோனா நோயாளிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் தப்பி ஓடவில்லை. நாங்கள் அனைத்து நோயாளிகளையும் கண்காணிக்கிறோம். அவர்களின் தொலைபேசி எண்களைக் குறிப்பிடுவதிலோ அல்லது அவர்களின் முகவரியைக் குறிப்பிடுவதிலோ தவறு நடந்திருக்கலாம். முகவரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைய பகுதிகள் காலனி பகுதிகளைச் சேர்ந்தவை. சிலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.