இந்தியா

7 வயது சிறுவனின் உயிரை பறித்த திடீர் மாரடைப்பு: என்னதான் நடந்தது?

நிவேதா ஜெகராஜா

கர்நாடகாவின் மங்களூருவில் 7 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் அமரமுத்னூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தவர்தான், சிறுவன் மோக்‌ஷித். சிறுவன் மோக்‌ஷித்துக்கு, கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின்னர் சிறுவன் மோக்‌ஷித் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். உடனடியாக அவரது தந்தை சந்திரசேகர ஆச்சார்யா, மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்திருக்கிரார்.

இதுகுறித்து அப்பகுதி மருத்துவ அலுவலர் கூறுகையில், “சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் நான் பேசினேன். சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்துள்ளேன். சிறுவனுக்கு, பெரிகார்டிட்டீஸ் என்ற பிரச்னை இருந்துள்ளது. இதனால் சிறுவனின் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே மாரடைப்புக்கு வழிவகுத்துள்ளது.

உடற்கூராய்வு அறிக்கையின்படி, சிறுவனின் இதயத்தில் திரவம் நிறைந்திருக்கிறது தெரியவந்தது. பெரிகார்டிட்டீஸ் என்பது, இதய அழற்சியாகும். இதுமிகவும் அரிய வகை நோய். இது இருந்தால், இதயத்தின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும்” என்றுள்ளார். 7 வயது சிறுவன் திடீர் மாரடைப்பால் இறந்திருப்பது, பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.