மத்தியப்பிரதேசத்தில், தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ 1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த நபர் ஒருவர், இழப்பீடாக ரூ. 4000 பெற்றிருப்பது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் சுக்ரேஷ் ஜெயின். இவர் கடந்த நவம்பர் 14, 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் நிறுவனத்திடம் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது, சிலிண்டர் டெலிவரி ஊழியரிடம் கேஸ் சிலிண்டரின் விலை எவ்வளவு என்று கேட்க.. ரூ 753.50 ரூபாய் என்ற பில்லை சக்ரேஷிடம் கொடுத்துள்ளார் ஊழியர்.
ஆனால், சிலிண்டரை டெலிவரி செய்தவர் சுக்ரேஷிடமிருந்து வாங்கியது ரூ 755 ரூபாய். இதனால், சந்தேகமடைந்த சுக்ரேஷ் சிலிண்டர் டெலிவரி ஊழியரிடம் மீதி தொகையை கேட்க.. மறுத்த ஊழியர், கேஸ் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ரேஷ், எந்த தாமதமும் செய்யாமல், சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்தினத்தின் மீதும் ஊழியரின் மீதும் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இவரது ஆரம்பக்கட்ட புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜூலை 15,2019 ஆம் ஆண்டு மீண்டும் சாகாரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
இப்படி 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகுதான் தற்போது அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கால் சக்ரேஷ் எதிர்க்கொண்ட மன, நிதி, மற்றும் சேவைத்தொடர்பான பிரச்னைக்களுக்கு இழப்பீடாக ரூ.2000 மும், சட்ட செலவுகளுக்கு ரூ.2000 இழப்பீடாக கேஸ் நிறுவனம் சக்ரேஷுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சக்ரேஷிடம் பெற்ற ரூ 1.50 ரூபாயை ஆண்டுக்கு 6% வட்டியுடன் வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெறும் 1.50 ரூபாயாக இருந்தாலும், தொடரப்பட்டது வழக்கு அல்ல..எங்களது உரிமை மற்றும் சுயமரியாதை சார்ந்த போராட்டம் என்று சக்ரேஷ் தெரிவித்துள்ளார். சக்ரேஷின் இந்த போராட்டம் வணிக நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும், நுகர்வோரை நியாயமாக நடத்தவேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது.