ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் குழு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த பேருந்தில் சென்றவர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்படாமல், பாதுகாப்பில்லாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களின் பேருந்து மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அடுத்து சம்பவ இடத்துக்கு மத்திய ரிசர்வ் படை போலீசார் (சிஆர்பிஎஃப்) போலீசார் விரைந்துள்ளனர். தாக்குதலில் 7 பயணிகள் உயிரிழந்ததாகவும், 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமர்நாத் புனித யாத்திரை செல்லும் வாகனங்கள் சிஆர்பிஎஃப் போலீசாரின் பாதுகாப்போடு பயணிக்கின்றன. பயங்கரவாதி புர்ஹான் வாணி கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.