share market ANI
இந்தியா

ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி.. அதிகரித்த முதலீடு.. இந்தியச் சந்தையில் திடீர் திருப்பம்!

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று மாபெரும் ஏற்றம் காணப்பட்டது. சந்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள் முதலீட்டாளர்களின் செல்வத்தில் கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் கோடி சேர்ந்தது

Prakash J

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 8%க்கும் மேலாகக் கடுமையாகச் சரிந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மீண்டும் தொடங்கிய கொள்முதல் மற்றும் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட ஏற்றம் ஆகியவை இணைந்து இந்தியப் பங்குகளை உயர்த்தியதால், சந்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள் முதலீட்டாளர்களின் செல்வத்தில் கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் கோடி சேர்ந்தது. இந்தியா தனது எண்ணெய்த் தேவையை அதிகளவில் இறக்குமதி செய்வதால், இது முதலீட்டாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

share market

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெருமளவில் பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், மீண்டும் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மட்டும் அவர்கள் சுமார் ரூ. 7,284 கோடிக்கு மேல் இந்தியப் பங்குகளை வாங்கியுள்ளனர். இது, அக்டோபர் 28, 2025-க்குப் பிறகு ஒரே நாளில் செய்யப்பட்ட மிக அதிகபட்ச கொள்முதலாகும். அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் இந்தியச் சந்தைகளுக்கும் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய்யின் விலை சரிவு இந்தியப் பொருளாதாரத்தின் பல முக்கிய அளவீடுகளில் நேரடி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விலை சரிவால் இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாகக் குறைந்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள் வருகிறது.

share market

போக்குவரத்து மற்றும் தளவாடச் செலவுகள் கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்தே உள்ளன. இதன் விலை குறையும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தடுக்கப்பட்டு பணவீக்கம் குறைகிறது. மேலும், பணவீக்கம் கட்டுக்குள் வரும்போது, இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பு உருவாகிறது. கச்சா எண்ணெய்யை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் விமானப் போக்குவரத்து, பெயிண்ட், டயர், பிளாஸ்டிக் மற்றும் FMCG துறைகளின் உற்பத்திச் செலவு குறைகிறது.