power bill
power bill  twitter page
இந்தியா

ரூ.1500 வந்த இடத்தில் 7 கோடி ரூபாயா!!! வாடகை வீட்டில் வசிப்பவருக்கு ஷாக் அடித்த கரண்ட் பில்!

Prakash J

கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும், வெயில் தாக்கம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், வெக்கையின் தாக்கத்தை சமாளிக்க வீட்டில் ஏசி, ஃபேன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும். இதனால், கரண்ட் பில் வழக்கத்திற்கு மாறாக கணக்கில்லாம் தாருமாறாக எகிறும். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர வீடுகளில் சில ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே கரண்ட் பில் வரும். இன்னும் கொஞ்ச பணக்கார வீடு மற்றும் அலுவலகங்களில் லட்சத்துக்குள் வரலாம். ஆனால், வாடகை வீட்டில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 7 கோடி ரூபாய்க்கு மேல் வந்திருப்பதுதான் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர், அதே பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரது வாடகை வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ.700 முதல் 1,500 ரூபாய் வரையிலேயே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநில மின்சாரத் துறை நிர்வாகம் சார்பில், ஸ்மார்ட் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டது. அதே வகையிலான மீட்டர், துர்கா பிரசாத் பட்நாயக் வீட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. அது பொருத்தப்பட்டது முதல், துர்கா பிரசாத் பட்நாயக்கும், தன்னுடைய மின்கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகவே செலுத்தி வந்துள்ளார்.

அதன்படி, இந்த மாத மின் கட்டணத்தைச் செலுத்தும் பொருட்டு ஆன்லைனில் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடப்பு மே மாதத்திற்கு மாதாந்திர மின் கட்டணமாக 7,90,35,456 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியுற்ற அவர், ஏதாவது தொழில்நுட்பப் பிரச்னையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் இதுவரை எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என துர்கா பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் மாதாந்திர மின் கட்டணமாக ரூ.700 முதல் 1500 வரை மட்டுமே செலுத்தி வந்தேன். எங்கள் வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு மின் கட்டணம் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 2,400 ரூபாயும், ஏப்ரல் மாதம் 6,000 ரூபாயும் கட்டியிருந்த நிலையில், தற்போது 7,90,35,456 ரூபாய் வந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து மின்சார அலுவலர்களிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் இதுவரை அதற்கு எந்தப் பதிலும் தரவில்லை” எனப் புலம்பியுள்ளார்.