13 கேண்டீன் வெயிட்டர் பணிக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு படித்துள்ளனர் என மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 13 கேண்டீன் வெட்டர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான கல்வி தகுதி 4 வகுப்பு படித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த பணிக்கான தேர்வு முறைகள் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிறைவடைந்தது. 100 மார்க் அடிப்படையில் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், இந்தப் பணிக்கு தேவையான 13 ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் எட்டு பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் பெண்கள் எனவும் மகாராஷ்டிரா செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் “தற்போது வேலையில் சேர்வதற்கான நடைமுறை சென்று கொண்டிருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட 13 பேரில் 12 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். ஒருவர் மட்டும் 12 ஆம் வகுப்பு படித்தவர். ஏனென்றால் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 25 - 27 வயதிற்குள் இருக்கக்கூடிய பட்டப்படிப்பு படித்தவர்கள்” என கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெயிட்டர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்தற்கு எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் வெயிட்டர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிப்பதை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டில் ஒரு கோடி மக்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் எனவும் அதில் 65 லட்சம் பேர் பெண்கள் எனவும் குறிப்பிட்டார்.
‘மேக் இன் இந்தியா’, ‘மேக் இன் மகாராஷ்டிரா’, மற்றும் ‘ஸ்கில் இந்தியா’ என பல்வேறு கனவு திட்டங்களை பிரதமர் மோடி அவரது பதவி காலங்களில் அறிவித்தார். ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. தோல்வியில் முடிவடைந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வாங்கி தருவதாக கூறிய மோடியின் பிரச்சாரம் என்ன ஆனது. மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.” என குப்தா தெரிவித்துள்ளார்.
“முன்னதாக, மகாராஷ்டிராவில் 852 போலீஸ் பணிக்கு 10 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ரயில்வேயில் 10 ஆயிரம் காலியிடங்களுக்கு ஒரு கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது” என முண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.