உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமியை மர்மநபர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
உத்தரபிரதேசத்தின் ஹபூர் பகுதியில் 6 வயது சிறுமி வீட்டுற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், சிறுமியின் அந்தரங்க உறுப்பை சிதைத்து ஊருக்கு வெளியே சிறுமியை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார்.
அதேநேரம் சிறுமியை நீண்ட நேரம் காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 12 மணி நேர தேடுதலுக்கு பிறகே மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுமியை கடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
(போலீசார் வெளியிட்ட வரைபடம்)
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறோம். அடையாளத்தின் அடிப்படையில் குற்றவாளியின் 3 விதமான வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர். வரைபடத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்,