இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக வேலை தேடுபவர்கள், முதலாளிகள், தொழில் துறை சார்ந்த பயிற்சி அளிப்பவர்கள் என அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற வகையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட மத்திய அரசின் வேலைவாய்ப்பு போர்டலான ASEEM தளத்தில் 40 நாட்களில் சுமார் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்த தளத்தில் பதிவு செய்தவர்களில் மிக மிக குறைவான சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான ஒரு வார காலத்தில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் 691 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தரவுகள் சொல்கின்றன.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தொகுத்த தரவுகளின் படி வேலை தேடும் 3.7 லட்சம் பேரில் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே பலன் அடைந்துள்ளனர். பதிவுசெய்த 69 லட்சம் பேரில் 1.49 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
டைலர், எலக்ட்ரீசியன்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஃபிட்டர்கள் ஆகியோர் வேலை தேடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
கூரியர் டெலிவரி பிரதிநிதிகள், செவிலியர்கள், விற்பனை பிரதிநிதிகள் மாதிரியான வேலையாட்களின் தேவை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகின்றன எனவும் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ASEEM தளத்தில் தற்போது சுமார் 443 நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் வேண்டுமெனவும் பதிவு செய்துள்ளன.