இந்தியா

அசாம் : இறுதி ஆசையை நிறைவேற்றாமல் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்!

EllusamyKarthik

அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவர் தனது இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாமல் மரணம் அடைந்துள்ளார். தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிப்பதே அவரது வாழ்நாளின் இறுதி ஆசையாக இருந்தது. ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதற்காக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வந்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 

அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் கிராமம் தான் அந்த முதியவரின் சொந்த ஊர். தேயிலை தோட்டத்தில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்த அவரது பெயர் சுக்தேவ் ரீ. 

வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டதால் அவர் சில ஆண்டுகள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற ஆலோசனையின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படலாம் என சொல்லிய காரணத்தினால் காவலில் இருந்து வெளியேறினார் சுக்தேவ். 

பின்னர் வெளிவந்த அவர் தன் குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அப்போது சமூக ஆர்வலர் ஒருவர் சுக்தேவுக்கு உதவ முன்வர மீண்டும் தனது நாட்டுடமை குறித்து வழக்கு தொடுத்துள்ளார். 

இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்துள்ளார். தற்போது அவரது குடும்பம் அவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இது போல பல முதியவர்கள், தாங்கள் இந்தியர்கள் தான் என நிரூபிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதில் சிலர் தடுப்பு காவலில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர்.