இந்தியா

நீட் தேர்வில் தேர்ச்சி.. மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!

JustinDurai

64 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர்.

ஒடிஷாவின் பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். சிறுவயதிலேயே மருத்துவராகும் கனவில் படித்து வந்தவர், எதிர்பாராதவிதமாக அவரது ஆசை நிறைவேறவில்லை. எனினும் தொடர்ந்து படித்து பட்டம் பெற்று, வங்கிப் பணியில் சேர்ந்தார். இருந்தாலும், அவரது மருத்துவர் கனவு ஆழ்மனதில் இருந்துகொண்டே வந்தது.

இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, மீண்டும் அவர் தனது கனவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.  நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை  என்பதால்அதில் தேர்வாகி மருத்துவக் கனவை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால், நீட் நுழைவுத் தேர்வு எழுத தயாரானார்  ஜெய்கிஷோர் பிரதான். அதன்படி கடந்த ஆண்டு நீட் தேவை எழுதி வெற்றிபெற்றதுடன் அதைத்தொடர்ந்து நடைபெற்ற கவுன்சிலிங்கிலும் தேர்வாகி 64 வயதில் தனது மருத்துவர் கனவை நிறைவேற்றி உள்ளார்.

ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் மாவட்டம் புர்லா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.  படிப்பில் சேர்ந்து ஆச்சர்யப்படுத்தி இருப்பதுடன் தனது கனவையும் நிறைவேற்றி  உள்ளார்.

இதுகுறித்து ஜெய்கிஷோர் பிரதான் கூறுகையில், ‘’நீட் தேர்வுக்கான தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படித்து வந்ததால்தான், தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. எனது தந்தைக்கு செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர் கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்தார். அது எனது மனதில் மருத்துவம் படிக்க மேலும் ஆசையைத் தூண்டியது’’ என்று கூறியுள்ளார்.

தற்போது, ஜெய்கிஷோர் பிரதான் எம்பிபிஎஸ் படிக்கும் அதே மருத்துவக் கல்லூரியில், அவரது மகள்  இரண்டாமாண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.