செய்தியாளர் கௌசல்யா...
பழைய கார்களை வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் பழைய கார்கள் சந்தை மதிப்பு 2 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 2028ஆம் ஆண்டில் இந்தியாவில் பழைய கார்கள் சந்தையின் மொத்த மதிப்பு 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி உயர்வு என்பது பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள் மூலம் விற்பன செய்யப்படும் பழைய கார்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் ஒரு பழைய காரை வாங்கும்போது உள்ள விலைக்கும், விற்கும்போது உள்ள விலைக்கும் இடைப்பட்ட கூடுதல் தொகைக்கு மட்டுமே 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பழைய கார்கள் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கார் உரிமையாளர் என்ற கனவை அடைவதற்கான எளிய வழியாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி உயர்வு பாதிப்படைய செய்யும் என இத்துறையை சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூறுகின்றன. அதேநேரம், புதிய வாகனங்கள் தேக்கமடையாமல் இருக்க, இது மறைமுகமாக உதவி செய்யும் என பொதுபோக்குவரத்து துறை நிபுணர் அமுதன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான பழைய கார்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், உலகளவில் 4 கோடி பழைய கார்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பழைய கார்களின் பயன்பாட்டை குறைக்கு நோக்கில் வரி உயர்த்தப்பட்டாலும், வரும் நாட்களில் வணிக நிறுவனங்கள் இந்த உயர்வை மக்களிடமே வசூலிக்கும் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.