இந்தியா

வெட்டவெளியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர் 

வெட்டவெளியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர் 

webteam
பொதுவெளியில் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று காண்பவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை, ஒருவர் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரை, ஒருமுறையல்ல இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதுவும் அருகிலேயே நின்று இந்தக் கொலைவெறிச் செயலை அந்த நபர் செய்துள்ளார். அந்த நபர் சுடும் காட்சியை அண்டை வீட்டுக்காரர் ஒருவர், தனது மொபைலில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். ஏறக்குறைய இது ஒரு நிமிடம் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
 
இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் பாட்டியைத் துப்பாக்கியால் சுடும்போது அவரைக் காப்பாற்ற யாருமே வரவில்லை என்பதுதான்.  அந்த மூதாட்டி உதவிக்கேட்டு அக்கம் பக்கத்தினரைக் கதறி அழைக்கின்றார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.  இந்தச் சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள, அதிகம் குடியிருப்புகள் உள்ள கஸ்கஞ் மாவட்டத்தில் உள்ள ஒரு தெருவில்  நடந்தேறியுள்ளது. நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டும்போது அந்த மூதாட்டி வீட்டிற்குள் ஓட முயற்சிக்கிறார். 
 
 
ஆனால்  அந்த மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியின் விசையை அழுத்திவிடுகிறார்.  அந்தக் குண்டு பெண்ணின் முதுகில் பாய்ந்ததும் அவர் வலியால் துடிக்கிறார்.  இந்தக் கொடூரமான காட்சியை  அக்கம்பக்கத்தினர் மொட்டை மாடியில் நின்றபடி தொடர்ந்து பதிவு செய்துள்ளனர். 
 
 
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மோனு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் அந்தப் பெண்ணைக் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.   பெண்ணை சுட்ட பின்னர் அவருக்கு அடைக்கலம் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொலை காட்சியை வீடியோவாக படமாக்கிய  அண்டை வீட்டுக்காரர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.