இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க 1000 கி.மீ சைக்கிளில் வந்த 60 வயது முதியவர்

webteam

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முதியவர் ஒருவர் 11 நாட்களில் 1000 கி.மீ சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2020-ல் இந்த புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் வேளாண் விளை பொருள்களின் சந்தையில் இருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றும் என்கிறது மத்திய அரசு.

ஆனால் குறைந்தபட்ச ஆதார விலையை, இந்த சட்டங்கள் ஒழித்துவிடுமோ எனவும் பெரு நிறுவனங்கள் மற்றும் பெரிய வியாபாரிகளின் தயவில் விவசாயம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் விவசாயிகள் பயப்படுகிறார்கள். இதனால் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 22 வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரின் சிவான் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவரான சத்யதேவ் மஞ்சி. இவர் 1000 கி.மீ சைக்கிளிலேயே பயணம் செய்து டெல்லி - ஹரியானா எல்லையின் திக்ரி என்ற இடத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது சொந்த மாவட்டமான சிவானிலிருந்து இங்கு வருவதற்கு எனக்கு 11 நாட்கள் ஆகின. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை நான் போராட்டத்தில் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.