இந்தியா

'2014-ல் 7,910... 2020-ல் 12,852...' - இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 60% உயர்வு!

JustinDurai

"நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன" என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, "புலி, சிங்கம், சிறுத்தைகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பெருக்க வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.

இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3,421, 1,783 மற்றும் 1,690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.

இந்தியாவில் புலிகளை கண்காணிக்கும் முறை, சிறுத்தைகள் போன்ற இனங்களையும் கணக்கிட வழிவகுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில்தான் சிறுத்தைகள் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட்டன. சிறப்பு மென்பொருளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 51,337 சிறுத்தை போட்டோக்களில், 5,240 இளம் சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டன" என்றார் பிரகாஷ் ஜவடேகர்.