இந்தியா

லிஃப்டில் சிறுவனை சீறிப்பாய்ந்து கடித்த வளர்ப்பு நாய்: நொய்டாவில் தொடரும் அச்சுறுத்தல்!

JananiGovindhan

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை காட்டிலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் அச்சுறுத்தலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாக லிஃப்டில் சென்ற 6 வயது சிறுவன் மீது வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரெசிடென்ஷியா என்ற குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. “அந்த நாய் எங்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒன்றுதான். இருந்தாலும் லிஃப்டில் நாய் கடித்ததில் இருந்தே என் மகன் மிகவும் பயத்தில் இருப்பதோடு, அதனை பிடித்து கொல்ல வேண்டும் என்றும் கூறுகிறான்.” என்று நாயால் கடிப்பட்ட சிறுவனின் தாயார் கூறியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிறுவனின் தந்தை, “நாய் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து என் மகனை கடித்திருக்கிறது. அது முதலில் கடித்ததும் அம்மாவின் பின்னால் ஒளிந்துக்கொண்ட போதும் அந்த நாய் தன்னுடைய ஆக்ரோஷத்தை நிறுத்தவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சிறுவன் நாய் கடித்தது குறித்து தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தியதோடு, இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக ஆதங்கப்படுகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு அறிவிப்பு பலகையில் நாய்களைக் கட்டுப்படுத்த சில விதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் யாரும் அவற்றைப் பின்பற்றுவது இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் தரப்பில் இருந்து, “இந்த சம்பவம் பயங்கரமானதாக இருக்கிறது. நாங்கள் வகுத்துள்ள எந்த விதிமுறையையும் நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றுவதில்லை. இதுபற்றி கிரேட்டர் நொய்டா நிர்வாகத்திடம் புகாரளிப்பதோடு, நாய்கள் அச்சுறுத்துவதை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வரவும் கேட்கப் போகிறோம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.