இந்தியா

பெங்களூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி!

பெங்களூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி!

webteam

பெங்களூரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலியாயினர். 

பெங்களூர் எஜிபுரா பகுதியை சேர்ந்தவர் குணேஷ். இவருக்கு சொந்தமான இரண்டு மாடி கொண்ட வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இதில் கீழே இரண்டு குடும்பமும் மேல் தளத்தில் இரண்டு குடும்பமும் வசித்துவந்தன. இன்று காலையில் மேல் வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர், பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். போலீசுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மாடியில் குடியிருந்த கலாவதி (68), ரவிச்சந்திரன் (30) ஆகியோரின் உடல்கள்மிட்கப்பட்டன. காயமடைந்திருந்த இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே மேலும் நான்கு பேரின் உடல்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 3 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூர் மேயர் சம்பத் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இடிபாடுகளை
அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.