இந்தியா

”கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு

JustinDurai

கார்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டம் அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் M1 வகை கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அந்த கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு கடந்த  ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வரைவு அறிவிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய விதிமுறை 2023 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமை எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் குறைந்தபட்சம் நான்கு சக்கரங்களைக் கொண்ட மோட்டார் வாகனங்கள் 'M' என குறிப்பிடப்படுகிறது. 'M1' என்பது ஓட்டுனர் இருக்கை தவிர கூடுதலாக 8 இருக்கைகளை உள்ளடக்கிய, பயணிகள் மோட்டார் வாகனம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏர்பேக் என்பது, கார் விபத்தில் சிக்கும்போது சென்சார் மூலம் உணரப்பட்ட ஏர்பேக் ஆனது சட்டென்று விரிவடைகிறது. அதன் மூலம் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதும், உயிரிழப்பதும் குறைகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சைரஸ் மிஸ்திரி சில வாரங்களுக்கு முன் மும்பைக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை. இதையடுத்து, சாலை பாதுகாப்பு விதிகள் மட்டுமின்றி வாகன பயணத்தின்போது சீட் பெல்ட் அணிவது முக்கியம் என்பதை உணர வைத்துள்ளது.

இதையும் படிக்க: அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு ! - உச்சநீதிமன்றம்