இந்தியா

5G அடிப்படை விலையை குறையுங்கள் - TRAI பரிந்துரை

ச. முத்துகிருஷ்ணன்

அதிக போட்டியை ஈர்க்க 5ஜி ஸ்பெக்ட்ரம் அடிப்படை விலையை 40 சதவீதம் வரை குறைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 5G அலைக்கற்றைகளின் அடிப்படை விலையைக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. 700 MHz அலைவரிசையின் விலையில் 40 சதவிகிதம் குறைப்பு மற்றும் 3300-3670 MHz அலைவரிசையில் 36 சதவிகிதம் குறைக்க மத்திய அரசிடம் பரிந்துரை  செய்துள்ளது.

மொத்தத்தில், பல்வேறு பேண்டுகளின் இருப்பு விலை கடந்த முறை பரிந்துரைத்ததை விட கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைவாக இருக்கும். இது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய டெலிகாம் நிறுவனங்களின் போட்டி ஏலத்தை ஈர்க்கும் என டிராய் கருதுகிறது. தனியார் தொலைத்தொடர்பு வழங்குநர்களால் 2022-23க்குள் 5G மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு வசதியாக, ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 இல் நடத்தப்பட உள்ளது. 5G அதிவேகத்தில் புதிய சேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை வழங்கும்.

திங்களன்று தனது பரிந்துரைகளை வெளியிட்ட டிராய், தற்போதுள்ள 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் புதிய ஸ்பெக்ட்ரம் 600 மெகா ஹெர்ட்ஸ், 3300-3670 MHz மற்றும் 24.25-28.5 GHz அலைவரிசைகளில் உள்ள அனைத்து ஸ்பெக்ட்ரம்களும் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை, பணப்புழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் பகுதி கட்டணம் உட்பட எளிதான கட்டண விருப்பங்களை அனுமதிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.