இந்தியா

ஆந்திராவில் பள்ளிகள் ரீஓபன்: 3 நாட்களில் 575 மாணவர்கள்; 829 ஆசிரியர்களுக்கு கொரோனா.!

webteam

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் 575 மாணவர்களுக்கும், 829 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து ஆந்திராவில் கடந்த 2ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆந்திரபிரதேசம் கல்வித்துறை அறிக்கையின்படி, “9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 9.75 லட்சம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3.93 லட்சம் மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். அதேபோல், 1.11 லட்சம் ஆசிரியர்களில் 99,000 ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களில் கலந்துகொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களில், 575 மாணவர்களும், 829 ஆசிரியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஆபத்தானது அல்ல என்று பள்ளி கல்வி ஆணையர் வி.சின்ன வீரபத்ருது தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.