செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் மகர நட்சத்திர தினமான ஜனவரி 14ம் தேதி, மகர சங்கம பூஜையும், பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் சார்த்திய ஐயப்பனுக்கு மகாதீபாரதனை நடக்கிறது. இது குறித்து சபரிமலையில் கேரள போலீஸ் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் சபரிமலையில் செய்தியாளர்களிடம் கூறும்போது...
“சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசன தினத்தன்று பக்தர்களுக்கான பாதுகாப்பிற்காக 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதில், 1,800 போலீஸார் சபரிமலை சன்னிதானத்திலும், 800 போலீஸார் பம்பையிலும், 700 போலீஸார் நிலக்கல்லிலும், 1,050 பேர் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 650 பேர் கோட்டயத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மகர ஜோதி தரிசனம், தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்வர். திருவாபரண ஊர்வலத்திற்கு ஒரு எஸ்.பி., 12 டி.எஸ்.பி., 33 இன்ஸ்பெக்டர்கள், 1,440 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மகரஜோதியை தரிசிக்கும் அனைத்து வியூ பாயிண்ட்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.