இந்தியா

மூன்று மாதத்தில் 50 சதவீதம் ஏடிஎம்கள் மூடப்படும் - புதிய தகவல்

மூன்று மாதத்தில் 50 சதவீதம் ஏடிஎம்கள் மூடப்படும் - புதிய தகவல்

rajakannan

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு 50 சதவீதம் ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் பணபரிவர்த்தனைகளில் முக்கிய பங்காற்றுவது ஏடிஎம். பணத்தை மொத்தமாக கையில் வைத்திருப்பதால் பாதுகாப்பு இல்லை என்பதால் தேவைக்கேற்ப பணத்தை எடுத்து பயன்படுத்தும் விதத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நகரம் , கிராமம் என்று ஏடிஎம்கள் அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. அனைத்து வங்கிகளும் மக்கள் பயனடையும் விதத்தில் முக்கிய இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை வைத்துள்ளன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு 50 சதவீதம் ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் தற்போது 2,38,000 ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், 1,13,000 ஏடிஎம்கள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஏடிஎம்களை பயன்படுத்தி வருபவர்கள் சிரமப்படுவார்கள். தற்போது உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் பழைய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கான தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால், தற்போது புதிதாக அச்சிடிக்கப்பட்டுள்ள நோட்டுகளை அந்த ஏடிஎம்களில் வைப்பது சிரமமாக உள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம்கள் தான் இனி பயன்படுத்த வேண்டும்” என ஏடிஎம் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். 

சுமார் 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 8.9 ஏடிஎம்கள் மட்டுமே உள்ளது. தற்போது நகர்புறங்கள் அல்லாத இடங்களில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் பாதுகாப்பானதாக இல்லை என்பதாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.