இந்தியா

உத்திரபிரதேசம்: பசியால் இறந்த 5 வயது சிறுமி - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Sinekadhara

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் நாக்லா விதிச்சந்த் கிராமத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமி, உணவு இல்லாமல் பசியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். ஒரு மாதக்காலமாக வேலை எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், அவரது தந்தையும் நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவர்கள் அரசின் நலத்திட்டங்கள் மூலம் மட்டுமே அவ்வப்போது உணவு மற்றும் உதவியைப் பெற்று வந்துள்ளனர்.

அந்த ஐந்து வயது சிறுமி இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ’’அப்பாவிக் குழந்தை பட்டினி மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மத்திய மற்றும் மாநில அரசின் எந்த சமூக நலத்திட்டங்களில் குறைவு ஏற்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரபிரதேச அரசு ஆணைக்குழு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. மேலும் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் தவறு செய்த அதிகாரிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றியும் குறிப்பிட வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.

இன்று ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிட்ட ஒரு குறுவீடியோவில் அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு பால் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.  “அந்த சிறுமி தொடர்ந்து வாந்தியெடுத்ததாகவும், ஆறு நாட்களாக வயிற்றுப்போக்கும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இறந்த நாளன்று பால் கொடுக்கப்பட்டது. அதை குடித்த உடனே வாந்தி எடுத்துவிட்டார். அந்த சிறுமியின் தாயார் தினக்கூலி வேலை செய்கிறார். அவர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது” என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் சமூக நலத்திட்டங்களில் எது தோல்வியுற்றது, ஏன் என்று விசாரிக்க அதிகாரிகள் குழு சிறுமியின் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமியின் வீட்டில் மின்சாரக் கட்டணம்கூட செலுத்தமுடியாததால் ஒரு வருடத்திற்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதாக குழு தெரிவித்துள்ளது. உ.பி.யில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு ஏன் ஏழைகளின் குரல்களையும் கவலைகளையும் கேட்க விரும்பவில்லை என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.