பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்தப்படுவது தொடர்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகம் நடத்திய ஐந்து பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹூந்தி மாவட்டத்தில் இருக்கிறது கோச்சாங் பகுதி. கிறிஸ்தவ மிஷனரியின் ஆதரவில் செயல்படும் அரசு சாரா அமைப்பை சேர்ந்த பெண்கள் உட்பட 11 பேர், கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள பள்ளிக்கு வந்தனர். பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்தப்படுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வீதி நாடகத்தை அவர்கள் நடத்தினர். அவர்களுடன் இரண்டு கன்னியாஸ்திரிகளும் இருந்தனர்.
அப்போது அந்த இடத்துக்கு திடீரென்று துப்பாக்கிகளுடன் சிலர் புகுந்தனர். நாடகம் போட்ட ஐந்து பெண்களை துப்பாக்கி முனையில் காரில் ஏற்றினர். பின்னர் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்தனர். ’இதை வெளியில் சொன்னால் வீடியோவை பரப்புவோம்’ என்று மிரட்டிவிட்டு அவர்களை விட்டு விட்டுச் சென்றனர்.
இதுபற்றி கோச்சாங் தேவாலய பாதிரியார் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதைய டுத்து மேலதிகாரிகளிடம் அவர்கள் புகார் கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஐந்து பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.