இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வெறும் 5 தோப்புக்கரணங்களா? - பீகார் பஞ்சாயத்தின் தீர்ப்பு!

Sinekadhara

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்தாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் குற்றங்கள் பதிவாவதால், ’பாலியல் வல்லுறவின் தலைநகரம் இந்தியா’ என்றே அழைக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை நிரூப்பிக்கும் விதமாக 5 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு 5 தோப்புக்கரணங்களை தண்டனையாக வழங்கியுள்ளது பீகாரின் ஒரு கிராம பஞ்சாயத்து.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 5 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைக்கூறி தனது கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்ற நபர், அங்குவைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்த சம்பவம் ஊராருக்கு தெரியவரவே, அந்த நபரை கிராம பஞ்சாயத்தின் முன்பு நிறுத்தியுள்ளனர்.

அந்த நபர் தான் செய்த குற்றத்திற்கு வருத்தப்படாததை அறிந்த பஞ்சாயத்து தலைவர்கள், சிறுமியை தனிமையில் அழைத்துச்சென்ற குற்றத்திற்காக அந்த நபருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அந்த தண்டனையின் வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பலரின் கோபத்தை தூண்டியிருக்கிறது. காரணம், பாலியல் வன்கொடுமைக்கு ஊர்த்தலைவர்கள் வழங்கிய தண்டனை 5 தோப்புக்கரணங்கள்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் இந்திய கிராமங்களில் தொடரும் ஆணாத்திக்கம் மற்றும் மறுக்கப்பட்ட நீதி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவரையும் டேக் செய்து, இந்த தண்டனைக்கு மாநில அரசு தண்டனை வழங்காமலே விட்டுவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளி மீது முதற்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இந்த குற்றத்திற்கு துணைபுரிந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா தெரிவித்துள்ளார்.