இந்தியா

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு! தொற்றுப் பரவலை தடுக்கும் பணி தீவிரம்!

webteam

சபரிமலையில் ஐந்து போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் சூழலில் சின்னம்மை பரவி வருவது தெரிய வந்துள்ளது.

சபரிமலை மணடல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைத்திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா கால கட்டுபாடுகள் எதுவும் இல்லாததால் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்து வரும் நிலையில், தற்போது பாதுகாப்பிற்கு போடப்பட்டிருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து போலீசாருக்கு சின்னம்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸ் தங்கும் விடுதி அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கியிருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, அவர்கள் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.

சின்னம்மை நோய்த்தொற்றைத் தொடர்ந்து சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்களின் சுகாதார மேம்பாட்டிற்காக, சபரிமலை சன்னிதானம், பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பக்தர்கள் கூடும் பகுதிகளில் தொற்றுநோய் பரவலை தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.