கர்நாடகாவில் யானை தந்தங்களை காரில் கடத்திச் சென்று விற்பனை செய்ய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக வனத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பசவன்னபுரா பகுதியில், ஊட்டியைச் சேர்ந்த கார் ஒன்றை டிசம்பர் 10 ஆம் தேதி கர்நாடக மாநில வனத் துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் மூன்று பேர் இருந்த நிலையில், காருக்குள் இருந்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மசினகுடி அருகேயுள்ள ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி, சொக்கநல்லி பகுதியைச் சேர்ந்த சஞ்சிவ் குமார் மற்றும் ஊட்டியைச் சேர்ந்த வினோத் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேலும் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த செல்வநாயகம் உட்பட 5 பேரை கர்நாடக வனத் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதிக்குள் கிடந்த யானை தந்தங்களை எடுத்து வந்து அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.