இந்தியா

கனமழை, நிலச்சரிவு: இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேர் உயிரிழப்பு

JustinDurai

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சர்கெட் என்ற கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு தாக்கமாக அதன் அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும்  12க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர் கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் ஒடிசா மாநிலத்தில் சில தினங்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் 10 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைப் படை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்ராவிலிருந்து கோவிலை நோக்கி பக்தர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவசர தேவைக்காக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 3500 கிலோ வெடி பொருள்கள்... தகர்க்க தயாராகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்