இந்தியா

சத்தமில்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்?

jagadeesh

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பெங்களூரில் 496 ஐடி ஊழியர்களை சில நிறுவனங்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400ஐ தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவலாகவில்லை என்ற ஆறுதலான தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு ஏதும் முடிவை அறிவிக்கவில்லை. இந்தியாவில் மார்ச் 25 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவிக்கும்போது சில அறிவுறுத்தல்களைக் கொடுத்திருந்தது.

அதில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் பிடித்தம் செய்யக் கூடாது. மேலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அரசின் அறிவுறுத்தலையும் மீறி பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் சில தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாக சிஐடியூ தொழிற்சங்கம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு சிஐடியூ பொதுச் செயலாளர் தபன் சிங் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள தபன் சிங் "பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவையும் மீறி ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் 496 பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனங்களின் பெயரையும் குறிப்பிட்டு மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.