டெல்லியிலுள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்த 49 வயதான மருத்துவர் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துள்ளார்.
டெல்லியில் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 49 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா நோயால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தது தெரியவந்துள்ளது. டாக்டர் யாசிர் நசீம் என்ற அந்த மருத்துவர் இந்த மருத்துவமனையில் இருதயம் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவில் (சிடிவிஎஸ்) மூத்த மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இங்கு சுமார் நான்கு ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்துள்ளார். இந்த மருத்துவமனையில் கொரோனா தொடர்பான வார்டு இயங்கி வந்துள்ளது.
இவரது மரணம் குறித்து மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர் ஜூன் 3க்குப் பிறகு மருத்துவமனைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் மருத்துவமனை அவருடன் தொடர்பில்தான் இருந்தது ” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே டாக்டர் நசீமின் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையின் முடிவு கொரோனா பாசிடிவ் என வந்ததுள்ளது. மேலும் அவர் கடந்த ஜூன் 21 அன்று கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.
டாக்டர் நசீம் டெல்லியிலுள்ள ஜாமியா நகரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியும் ஒரு மகப்பேறு மருத்துவர். அவரது இரண்டு சகோதரர்களில், ஒருவர் டெல்லியில் பல் மருத்துவராகவும் மற்றவர் அமெரிக்காவில் மருத்துவராக உள்ளனர். டாக்டர் நசீமின் நெருங்கிய நண்பரான தீரஜ் குமார் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’பத்திரிகைக்கு பேசுகையில் “மற்றவருக்கு உதவுவதில் அவர் பெரிய இதயம் கொண்ட மனிதர். ஆண்டுதோறும் அவர் பல சுகாதார முகாம்களில் பங்கேற்றார். அங்கு பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு அவர் இலவசமாக இதய நோய்க்கான ஆலோசனை வழங்கி வந்தார்” எனக் கூறியுள்ளார்.