manipur
manipur twitter
இந்தியா

5 இளைஞர்கள் கைது.. மெய்டீஸ் இன பெண்கள் அமைப்பு பந்த்! அணையாமல் எரியும் மணிப்பூர் விவகாரம்!

Prakash J

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

Manipur violence

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன்வந்திருக்கிறது. கலவரத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் என நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் குக்கி இன நண்பர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்ற பனகல் முஸ்லிம் ஆண் நண்பர் ஒருவரும், நேபாளிப் பெண் ஒருவரும் கடுமையாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர் hoihnu hauzel என்பவர், தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ’இந்த காணொளியைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இந்த இரண்டு துணிச்சலான இதயங்களும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிக்க, மறுபுறம், மணிப்பூரில் Meira Paibi என்ற மெய்டீஸ் பெண்கள் அமைப்பு, 5 உள்ளூர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பந்த் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக்கோரி இந்த அமைப்புகள் நேற்று (செப்.18) நள்ளிரவு முதல் 48 மணிநேர பந்துக்கு அழைப்புவிடுத்துள்ளன. நேற்று இந்த அமைப்பினர், ஐந்து இளைஞர்களை விடுவிக்கக் கோரி ஹுரை, கோங்பா, காக்வா (இம்பால் கிழக்கு மற்றும் மாவட்டம்), நம்போல், தவுபால் (பிஷ்னுபூர் மாவட்டம்) சில பகுதிகளின் முக்கிய சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பந்த் காரணமாக இன்று சந்தைகள், வணிகநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே மணிப்பூர் மேல்நிலை கல்வி வாரியம் இன்று, நாளையும் (செப். 18, 19) நடத்தத் திட்டமிட்டிருந்த 10ஆம் வகுப்புக்கான அனைத்துத் துணைத்தேர்வுகளும் பந்த் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உருவத்தை மறைக்கும் சீருடைகள் வைத்திருந்ததாகக் கூறி 5 இளைஞர்களைக் கைது செய்த மணிப்பூர் போலீசார், நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.