இந்தியா

44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமரை நேரில் அழைக்க டெல்லி செல்லும் முதல்வர்?

44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமரை நேரில் அழைக்க டெல்லி செல்லும் முதல்வர்?

சங்கீதா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில்
டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி துவக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்று, போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பால் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டி உள்ளதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி பயணம் குறித்து உறுதியான செய்திகள் எதுவும் வெளியாகாதநிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.