இந்தியா

இரண்டாவது அலை கொரோனாவில் 420 மருத்துவர்கள் மரணம்: இந்திய மருத்துவர் சங்கம்

நிவேதா ஜெகராஜா

இந்திய மருத்துவ கழகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், 420 மருத்துவர்கள் கொரோனா இரண்டாவது அலையில் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 100 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஏப்ரலில் இருந்தே கொரோனா மிக மோசமாக இருந்துவந்தது. இப்போதுதான் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. அப்படியிருக்கும் நிலையில், இப்போது அங்கு மருத்துவர்களின் இறப்பு அதிகமாக இருந்தது பற்றிய தரவுகளுடன் கூடிய இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

டெல்லியில் 100 மருத்துவர்கள் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், பீகாரில் 96 மருத்துவர்களும்; உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் இறந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னராக இந்த வார தொடக்கத்தில், 270 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்திருந்தது. அவர்களில், இந்திய மருத்துவர் சங்கத்தின் இயக்குநராக இருந்த 65 வயது மருத்துவர் அகர்வாலும் ஒருவர்.

கடந்த முதல் அலை கொரோனாவால் 748 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. சென்ற அலை, பல மாதங்களுக்கு நீடித்திருந்து ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை, இந்த அலையில் மிக குறுகிய காலத்திலேயே ஏற்பட்டிருப்பது பலருக்கும் அச்சத்தை கொடுத்துள்ளது. விரைவில் மூன்றாவது அலையும் ஏற்படும் என கணிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்கள் உட்பட முன்கள பணியாளர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் அலை, இரண்டாவது அலை என அனைத்தின் போதும் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு, பிரதமர் மோடி நேற்று நடந்த காணொளி சந்திப்பின் போது இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.