Model Image Chat Gpt
இந்தியா

உயிர்களை காத்த காவல் தெய்வங்கள்.. நேற்று விமானி ஸ்மித்.. 40 ஆண்டுக்கு முன்பு இந்திய பணிப்பெண்!

துப்பாக்கிச் சூட்டின்போது, மூன்று குழந்தைகளைத் தன் உடலால் மூடிப் பாதுகாத்தபோது பயங்கரவாதிகளின் தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தன. அவருக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உயர்ந்த விருதுகள் வழங்கி கவுரவித்தன.

Prakash J

இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், அவசரநிலையின்போது, மிகச் சிறந்த சமயோசித புத்தியுடன் செயல்பட்டு சுமார் 180 பயணிகளின் உயிரை பாதுகாப்பாகக் காப்பாற்றிய நிலையில், அதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு இந்திய பணிப்பெண் ஒருவர் 359 பேரைக் காப்பாற்றிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அவசரக் காலங்களில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மிகவும் சாதுரியமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் மனம் படைத்தவர்கள் எப்போதும் வரலாற்றில் இடம்பிடிப்பதுண்டு. அப்படியான ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் அரங்கேறியது. Flydubai FZ1073 என்ற Boeing 737 விமானம் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது. அந்த விமானம், ஜோர்டான் வான்வெளியில் சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தை மோதும் நோக்கில் துணை விமானி ஈடுபட்டதாகவும், இதற்காக தலைமை விமானியை கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், காயத்துடன் போராடிய தலைமை விமானி, சக பயணிகளின் உதவியுடன் விமானத்தைப் பாதுகாப்பாய் தரையிறக்கியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அந்த விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், அவசரநிலையின்போது, மிகச் சிறந்த சமயோசித புத்தியுடன் செயல்பட்டு சுமார் 180 பயணிகளின் உயிரை அவர் பாதுகாப்பாகக் காப்பாற்றினார். இக்கட்டான தருணத்தில் பதற்றமின்றி அவர் எடுத்த வேகமான முடிவுகளும் தொழில்முறை திறனும் பெரும் ஆபத்தைத் தடுத்தன. தற்போது அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், அவரைப்போலவே மிகவும் சாதுரியமாகவும் தைரியமாகவும் செயல்பட்ட இன்னொரு கேப்டனைப் பற்றிய வரலாறும் தற்போது வைரலாகி வருகிறது. 1986 செப்டம்பர் 5 அன்று, மும்பையிலிருந்து கராச்சி வழியாக அமெரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்த 'பான் ஆம் 73' (Pan Am Flight 73) விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, 'அபு நிடால்' அமைப்பைச் சேர்ந்த 4 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய நீரஜா பானோட், அந்த விமானத்தின் முதன்மைப் பணிப்பெண்ணாக கடமையாற்றினார். பயங்கரவாதிகள் விமானத்திற்குள் நுழைந்த அடுத்த கணமே, நீரஜா மிகச் சமயோசிதமாகச் செயல்பட்டு விமானிகளுக்கு ஆபத்து குறித்த ரகசியக் குறியீட்டை அனுப்பினார். இதன்மூலம் விமானிகள் மூவரும் விமானத்தின் மேல்தள அவசர வழியாத் தப்பினர். விமானிகள் இல்லாததால் கடத்தல்காரர்களால் விமானத்தை வேறு எங்கும் கடத்திச் செல்ல முடியாமல் தரையிலேயே முடங்கியது.

Model Image

அப்போது, கடத்தல்காரர்கள் அமெரிக்கர்களைக் இலக்கு வைத்துப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்த எண்ணி, பயணிகளின் பாஸ்போர்ட்டுகளைச் சேகரிக்குமாறு நீரஜாவிற்கு உத்தரவிட்டனர். நிலைமையை உணர்ந்த நீரஜா, சக ஊழியர்களுடன் இணைந்து விமானத்திலிருந்த 41 அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டுகளை இருக்கைகளின் அடியிலும், குப்பைத் தொட்டிகளிலும் மறைத்து வைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பயணிகள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தத் தொடங்கியபோது, நீரஜா உடனடியாக அவசர காலக் கதவைத் திறந்து, சறுக்கு வழியை இயக்கி பயணிகளை வெளியேறச் செய்தார். அவர் நினைத்திருந்தால் முதல் ஆளாகத் தப்பிச் சென்றிருக்க முடியும். ஆனால், 359 பயணிகளையும் வெளியேற்றிய பிறகே தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். துப்பாக்கிச் சூட்டின்போது, மூன்று குழந்தைகளைத் தன் உடலால் மூடிப் பாதுகாத்தபோது பயங்கரவாதிகளின் தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தன. அவருக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உயர்ந்த விருதுகள் வழங்கி கவுரவித்தன.