இந்தியா

நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட மானசரோவர் யாத்திரை பக்தர்கள் - ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

JustinDurai

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் வழியில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட 40 பக்தர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கைலாஷ் மானசரோவருக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய், சிக்கமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய வழிகளில் செல்லலாம்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாறைகள் உருண்டு சாலையை அடைத்துவிட்டன. இதனை அறியாமல் சென்ற 40 பக்தர்கள் பூண்டி கிராமத்தின் அருகே நடுவழியில் சிக்கிக் கொண்டனர். மேற்கொண்டு பயணிக்க முடியாமலும் திரும்பி வர முடியாமலும் 36 மணி நேரமாக அவர்கள் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து சிக்கித்தவித்த 40 பக்தர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற கன்வார் யாத்திரையும் தொடங்கி உள்ளது. அமாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கன்வார் யாத்திரை தொடங்கியுள்ளது.

இதையும் படிக்கலாம்: பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 90 வயது இந்திய மூதாட்டி