ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசர் விஜயகுமார், பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “40 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஓராண்டில் ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடியான நடவடிக்கைகளால் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் மிக முக்கியமான தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகும். பயங்கரவாதிகள் ஒழிப்பு என்பது ஒரு தருணத்தில் முடிந்து விடுவதில்லை. தொடர்ச்சியாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், அழிப்பு நடவடிக்கையும் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ளது, விழிப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும் திடீரென நடக்கும் தாக்குதலை எதிர்கொள்வது என்பது கடினம்” என்று கூறினார்.