Mahua Moitra web
இந்தியா

ரூ.40 கோடி லஞ்ச சர்ச்சை : மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக திரிணமூல் எம்பி-க்கள்

ரூ.40 கோடி லஞ்ச குற்றச்சாட்டால் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக 20 எம்.பிக்கள் சட்டப் போருக்கு தயாராகும் சூழல் உருவாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்; M. மீரா

மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கு ஆட்சிசெய்து வந்தது. இப்படி அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

Mamata Banerjee

ஆனால், இந்த தோல்வி வெறும் தேர்தல் தோல்வியாக இல்லாமல் அந்த கட்சியின் அடித்தளத்தையே காலி செய்யும் அளவு உருமாறியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் 80 எம்.எல்.ஏக்களோடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உருவாகியிருந்தது. அக்கட்சியின் இளம் தலைவர் ரிதாபிரதா (Ritabrata Banerjee) தலைமையில் 61 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்த நிலையில், மம்தாவின் விருப்பத்துக்கு எதிராக ரிதாபிரதாவை எதிர்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதேபோல, நாடாளுமன்றத்திலும் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த 28 மக்களவை உறுப்பினர்களில் 20 பேர், தலைமை கொறடா ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் பிரிந்து சென்று தனி அணியை அமைத்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணையவுள்ளதாக அறிவித்து, இந்த அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதினர். சக எம்.பி.க்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய தஸ்திதார், மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும், தங்கள் எதிர்கால அரசியல் பயணம் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

kakoli ghosh dastidar & Mamata Banerjee

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், இந்த எம்.பி.க்கள் திரிபுராவைச் சேர்ந்த 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (NCPI) என்ற அரசியல் அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த அணி உடனடியாக பாஜகவில் இணையவில்லை என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தனது ஆதரவை அளித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்காகத் தலா ரூ. 15 கோடி வரை வழங்கப்படுவதாகச் சிவசேனா (யுபிடி) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மஹூவா மொய்த்ரா தனது தனது X தளத்தில் வெறும் 15 கோடியா? ஏன் இவ்வளவு மலிவாக இருக்கிறார்கள்? திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடக்கத்திலேயே 4 கோடியும், அடுத்த 36 மாதங்களுக்கான பதவிக்காலத்தில் மாதந்தோறும் 1 கோடியும் (மொத்தமாக 40 கோடி) வழங்கப்படுவதாக எனக்கு தெரிய வந்திருக்கிறது என்று ஜூன் 17 அன்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மஹுவா மொய்த்ரா வுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அதிருப்தி அடைந்த வெளியேறிய 20 திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக 'இந்தியா டுடே டிவி' செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியை விட்டு விலகுவதற்குப் பதிலாகத் தங்களுக்குப் பணம் தருவதாக முன்மொழியப்பட்டதாக மொய்த்ரா கூறியதற்காக, அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அந்த எம்பிக்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.