இந்தியா

ஒரே ஒரு க்ளிக் தான்! மெசேஜ்-ல் வந்த லிங்கை ஓபன் செய்து பணத்தை இழந்த 40 வாடிக்கையாளர்கள்

JustinDurai

மும்பையில் 40க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் மோசடிக்காரர்களிடம் பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர். 

அண்மை காலமாக ஆன்லைன் மோசடி, வங்கி மோசடி போன்றவை வேகவேகமாக அதிகரித்து வருகின்றன. ஏதாவது அப்டேட் செய்ய வேண்டும் என கூறி தகவல்களை பெற்று திருடுவது, அல்லது நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது என மோசடி கும்பல்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் டாப் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியில், 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர்.

மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் குறைந்தது 40 வாடிக்கையாளர்கள் மோசடிகாரர்களிடம் பல லட்ச ரூபாயை ஏமாந்துள்ளனர். KYC மற்றும் பான் விவகாரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு வங்கியில் இருந்து வருவது போலப் போலி மெசேஜ் வந்துள்ளது. அந்த லிங்கை க்ளிக் செய்து மூன்று நாட்களில் இவர்கள் பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர். 

இதுபோல வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களைக் கேட்கும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுபோன்ற லிங்க்குளை க்ளிக் செய்யும்போது, அது வங்கியைப் போலவே இருக்கும் போலியான இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு வாடிக்கையாளரின் பயனர், பாஸ்வேர்ட் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைக் கேட்கிறது. அது உண்மையான வங்கி இணையதளம் என்று நம்பி, வாடிக்கையாளர்களும் அந்த தரவுகளை பதிவிடுகிறார்கள். இந்த தகவல்களை வைத்து 3 நாட்கள் கழித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர். 

இந்த வங்கி மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேரில் இந்தி டிவி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவர் ஆவார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.