இந்தியா

கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் ! அதிரடியாக மீட்ட ஆந்திர போலீஸ்

கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் ! அதிரடியாக மீட்ட ஆந்திர போலீஸ்

webteam

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஜஷீத் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் தப்பித்துச் சென்றனர். இது குறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சிறுவன் கடத்தல் தொடர்பாக 7 படைகளை அமைத்த போலீசார் கிழக்கு கோதாவரியை சல்லடைப் போட தொடங்கினர். 

சிறுவன் கடத்தல் தொடர்பாக எந்த தொலைபேசி மிரட்டல்களும் வராத நிலையில் இரண்டு நாட்கள் கடந்தன. இந்நிலையில் குத்துகுலுரு என்ற கிராமத்திலுள்ள செங்கள் சூளை அருகே  சிறுவனை கடத்தல் காரர்கள் விட்டுச்சென்றனர். தகவலறிந்த போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தல் தொடர்பாக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை எங்கு தங்கவைத்தனர் எனத்தெரியவில்லை என்று கூறிய சிறுவன், தன்னை கடத்தியவர்களில் ஒருவரின் பெயர் ராஜூ எனத்தெரிவித்தான். இதனை அடுத்து ராஜூ என்ற பெயரைக் கொண்டுபோலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கடத்தல்காரர்கள் இரண்டு நாட்களாக சிறுவனனுக்கு இட்லி மட்டுமே சாப்பிட கொடுத்துள்ளனர் என்றும் அவனை அடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது சிறுவன் பெற்றொர்களைக் கட்டி அணைத்து நெகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட போலீசாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.