நாய்
நாய் free pik
இந்தியா

உ.பி - தெருநாய்கள் கடித்ததில் 4 வயது சிறுமி உயிரிழப்பு; மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி

Jayashree A

நாய்கள் என்றாலே பலருக்கும் பயம் தொற்றிக்கொள்ளும். அதுவும் தெருநாய்கள் என்றால்... அவ்வளவுதான்.! சமீபகாலமாக நாடு முழுவதும் நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. நாய்களை பிடிக்க மாநகராட்சிகள் போதிய நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் ஆங்காங்கே நாய்களால் குழந்தைகள் தாக்கப்படும் செய்திகளும் அதிகரித்தப்படி இருக்கிறது. அப்படியான ஒன்று, உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் நாக்லா மகேஸ்வரி என்ற கிராமத்தில் 4 வயது நிரம்பிய சிறுமியை அப்பகுதி தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழந்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால், இது அந்த மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் தெருநாய்களால் நிகழும் பத்தாவது மரணம்.

இச்சம்பவம் குறித்து பிஜ்னோர் மாவட்ட போலிஸ் அதிகாரி SP நிஜோர் கூறுகையில், “4, 5 மற்றும் 7 வயது குழந்தைகள் மூவர், வயல்காட்டில் விவசாயம் செய்துவந்த தங்களது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எப்பொழுதும் செல்லும் சாலையை தவிர்த்து, அருகில் இருக்கும் கரும்பு தோட்டம் வழியே சென்றுள்ளனர். அந்நேரத்தில் சுமார் 6 தெரு நாய்கள் குழந்தைகள் மூவரையும் சூழ்ந்துக்கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதும் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த மக்கள் வந்து குழந்தைகளை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.

இதில் 4 வயது நிரம்பிய சிறுமிக்கு கழுத்திலும் முகத்திலும் அதீத காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே அவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். மற்ற இருகுழந்தைகளுக்கும் அதீத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என கூறினார்.

இந்நிலையில் இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 மாதங்களில் 6 குழந்தைகள் உட்பட 10 பேர் நாய் கடித்ததில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இனி தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறை தினம் ஆரம்பிக்கக்கூடும் என்பதால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சீறிய முயற்சியை அரசு தடுக்கவேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளனர். வெளியில் விளையாடும் குழந்தைகள் மேல் பெற்றோர்களின் கவனம் இருக்க வேண்டுமென அந்த மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள், தெருநாய்க்கடியை தடுப்பதே நிரந்தர தீர்வு என பெற்றோர் கூறிவருகின்றனர்.