சபரிமலைக்கு சென்ற 4 திருநங்கைகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோயிலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள போலீசார் விதித்துள்ளனர். இதற்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரிமலை கோயில் வளாகத்திலும் கூட கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை அனன்யா, திருப்பதி, அவந்திகா, ரஞ்சுமோல் ஆகிய திருநங்கைகள் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்தனர். எருமேலி அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தின, கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதற்கு திருநங் கைகள், ’பெண்களுக்குத்தான் தடை, எங்களுக்கு அல்ல’ என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இதுபற்றி திருநங்கை அனன்யா கூறும்போது, ’’எங்களை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். மீறினால் சிறையில் அடைப்போம் என்று மிரட்டினர். ஒரு போலீஸ்காரர், ஆண்களின் உடை அணிந்துவந்தால் பரிசீலிப்போம் என்று அவமானப்படுத்தினார். நான்கு மணி நேரமாக நாங்கள் தடுத்து வைக்கப்பட்டோம். பின்னர் கோட்டயம் பேருந்தில் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டனர்’ என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளா முழுவதும் திருநங்கைகள் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.