இந்தியா

காஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

webteam

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் ஹன்ஜன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வீரர்கள் விரைந்த நிலையில், அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். 

தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை ஆக்கிரமித்த பாதுகாப்பு படையினர், அங்கு சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பயங்கரவாதிகள் இருக்கிறார்களா ? என தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, இதே மாதம் 11ஆம் தேதி காஷ்மீரின் சோபியான் என்ற மாவட்டத்தில் நடந்த மோதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அண்மைக் காலத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் காஷ்மீரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது தீவிரமாக பதிலடி நடத்தி வருகின்றனர்.