Avimukteshwaranand
Avimukteshwaranand pt web
இந்தியா

“இவ்வளவு அவசரம் ஏன்” அயோத்தி ராமர் கோவில் விழாவை புறக்கணித்த 4 சங்கராச்சாரியார்கள்.. காரணம் இதுதான்!

Angeshwar G

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. 6000 பேர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில்

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க கடந்த மாதம் அழைப்பிதழ் கிடைத்தது. மதம் என்பது தனிநபர் விவகாரம். அதை அரசியல் திட்டமாக அயோத்தியில் ராமர் கோயிலை பாஜகவினர் கட்டி வருகின்றனர். மேலும், கட்டிமுடிக்கப்படாத கோயிலை அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திறக்க இருக்கின்றனர். ஆகியோர் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரியாதையுடன் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பினை பதிவு செய்தது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து இந்துக்களையும் சனாதன தர்மத்தையும் விமர்சித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில், 4 சங்கராச்சாரியார்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்து மதத்தின் விதிமுறைகளை பின்பற்றாததால் சங்கராச்சாரியார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள். கோவிலை கட்டி முடிக்காமல் சிலைகளை நிறுவுவது இந்து மதத்திற்கு எதிரானது. அவ்வளவு அவசரம் தேவையில்லை. கோவிலை கட்டிமுடிக்க போதுமான காலம் உள்ளது. அதன்பிறகு பிரதிஷ்டைகளை முடிக்க வேண்டும். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. அதேவேளையில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது” என தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவின் பூரி மடத்தின் சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு செல்வதாக இருந்தால், ஒரு உதவியாளருடன் வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு பேருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும்கூட, அந்த நாளில் நான் அங்கு செல்ல மாட்டேன். கோவர்தன பீடம்/மடத்தின் அதிகார வரம்பு பிரயாக் வரை பரவியுள்ளது. ஆனால் குடமுழுக்கு நிகழ்ச்சி குறித்து எங்களிடம் ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலோ பெறப்படவில்லை” என தெரிவித்திருந்தார்.

கும்பாபிஷேக நாட்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சங்கராச்சாரியார்கள் ஒருவர் பின் ஒருவராக கலந்துகொள்ளவில்லை என தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.