டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட கார் விபத்தில் வலுதூக்கும் வீரர்கள் 4 பேர் பலியாயினர். உலக சாம்பியன் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையில் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவில் பனி சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலுதூக்கும் வீரர்கள் ஆறு பேர் ஒரு காரில் டெல்லியில் இருந்து பானிபட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கார், டெல்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்பில் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலியான நான்கு பேரில் 3 பேர், ஹரிஷ், டிங்கு, சுராஜ் என்பது தெரிய வந்துள்ளது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. காயமடைந்தவர்களில் ஒருவர், சுக்ஷம் யாதவ். இவர் உலக வலுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.