செய்தியாளர்களிடம் பேசிய 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெயரும் அரசியல் சாசன அமர்வில் இடம் பெறவில்லை.
நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தீபக் மிஸ்ரா உட்பட 5 நீதிபதிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்விகார், சந்ராசுத், அசோக் பூஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாக கூறிய நீதிபதிகள் 4 பேரில் யாரும் இந்த அமர்வில் இடம் பெறவில்லை. தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு ஆதார் வழக்கு, ஒரினச் சேர்க்கை எதிரான சீராய்வு மனு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககோரும் வழக்குகளை விசாரிக்க உள்ளது.