இந்தியா

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரஸுக்கு சிக்கல்

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரஸுக்கு சிக்கல்

webteam

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 103 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸுக்கு 73 உறுப்பினர்களும் உள்ளனர். காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் நிலையில், பாஜக சார்பில் மூவரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் போட்டியிடுகின்றனர்.

தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், பாஜக இரு இடங்களையும், காங்கிரஸ் ஓர் இடத்திலும் உறுதியாக வெல்ல முடியும். இந்த நிலையில், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்களது பெயர் விவரங்களை இன்று வெளியிடுவேன் என சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார். கட்சி மாறுவதை தடுக்கும் வகையில் 14 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றுள்ளது.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகி, பாஜகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இவர்களில் ஆறு பேரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் லால்ஜி டன்டன் உத்தரவிட்டுள்ள நிலையில், நள்ளிரவில் முதலமைச்சர் கமல்நாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.