புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ளது இந்திரயாணி இரும்புப் பாலம். மே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்திரயாணி ஆற்றுப்பாலத்திற்கு ஏராளமானோர் வருகை புரிந்தனர்.
இந்தநிலையில்தான் பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கபட்ட நிலையில், தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கபட்டுள்ளதாகவும், 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 4 பேர் உயிரிழந்தனர். 51 பேர் படுகாயமடைந்தனர். இருவர் மாயம் என்று கூறப்படுகிறது. சுமார் 250 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணி கடினமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 லட்சத்தை நிதியுதவியாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, இப்பாலத்தில் நிலைக்குறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்பாலம் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து தெரிவித்த அதிகாரிகள், ஆற்றின் நீரோட்டத்தை காண அதிகமான மக்கள் பாலத்தின் மீது குவிந்தததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.