இந்தியா

டெல்லி: சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா

webteam

டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே டெல்லியில் கடந்த சில வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,437 ஆக இருந்தது. இந்த ஆண்டில் ஒரு நாள் கோரோனா பாதித்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். மேலும் 24 பேர் டெல்லியில் கோரோனாவுக்கு நேற்று உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், “சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 32 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. சர் கங்கா ராம் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி எடுத்திருந்தனர்” எனத் தெரிவித்தனர்.