மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பவானிப்பூரில் 3 மணி நிலவரப்படி 48.08% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியுற்றபோதும் முதலமைச்சராக பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப், தன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்கன்ஜ் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பவானிபூரில் 97 வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மட்டும் 35 கம்பெனி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் இம்முறையும் தாம் வெற்றி பெறுவது உறுதி என மம்தா தெரிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் பாஜக சார்பில் பிரியங்கா என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். பதற்றமான சூழல் நிலவுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் 200 மீட்டர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் போல மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் மொத்தம் 30 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.