இந்தியா

3500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

webteam

கடந்த மாதத்தில் மட்டும் 3500 குழந்தை ஆபாசப்பட இணையதளங்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் ஆபாசப்படங்களை பார்த்து கெட்டுப்போவதாக தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக பள்ளிகளில் இதுபோன்ற ஆபாச இணையதளங்களை முடக்கும் ஜாமர் கருவியை பொருத்துவது குறித்து சிபிஎஸ்இ-யிடம் நீதிபதிகள் கருத்து கேட்டிருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் பின்கி ஆனந்த், பள்ளி பேருந்துகளில் ஜாமர் கருவியை பொருத்துவது சாத்தியமில்லாத ஒன்று, பள்ளிகளில் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 3500 குழந்தை ஆபாசப்பட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

பள்ளிகளில் ஜாமர் பொருத்துவது சம்பந்தமாக தெளிவான அறிக்கையை தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.